×

ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் இரண்டு அடுக்கு மல்டி கார் பார்க்கிங் வளாகம்

*600 வாகனங்கள் நிறுத்தும் வசதி

*கோயில் பகுதியிலும் அைமக்க வலியுறுத்தல்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு ராமேஸ்வரம் நகர் கிழக்கு கடற்கரை பகுதியில் இரண்டு அடுக்கு மல்டி கார் பார்க்கிங் வளாகம் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்திற்கு நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். கார்,பஸ் ரயில்களில் வரும் இவர்கள் இங்கு தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்து பல இடங்களை பார்த்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ராமேஸ்வரம் நகருக்குள் பல இடங்களில் குறுகிய சாலைகள்தான் உள்ளது. நகரில் உள்ள நூற்றுக்கணக்கான தங்கும் விடுதிகளில் சில வற்றில் மட்டுமே வாகனம் நிறுத்துவதற்கான வசதி உள்ளது. தற்போதுள்ள கோயில் கார் பார்க்கிங் வளாகம் மற்றும் நகராட்சி கார் பார்க்கிங் வளாகத்தில் 600க்கும் குறைவான வாகனங்கள் மட்டுமே நிறுத்த முடியும். இதனால் விடுதிகளில் தங்கும் பயணிகளின் பெரும்பாலான வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தப்படுகிறது.

இதனால் நகருக்குள் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. வாகன விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க ராமேஸ்வரம் நகரில் மூன்று அடுக்கு மல்டிலெவல் கார் பார்க்கிங் அமைக்க வேண்டும் என்றும் இதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தி தினகரன் நாளிதழில் அடிக்கடி செய்தி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ராமேஸ்வரம் நகர் கிழக்கு கடற்கரை பகுதியில் கோயில் அருகாமையில் இரண்டு தளத்துடன் மல்டிலெவல் கார் பார்க்கிங் வளாகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

ராமேஸ்வரம் நகரில் தேசிய நெடுஞ்சாலை ரயில்வே பீடர் ரோட்டில் இருந்து அக்னி தீர்த்தம் கடற்கரைப்பகுதி செல்ல கோயில் தெற்கு ரதவீதி கடற்கரையோரத்தில் சாலை அமைக்க அரசு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் பணிகள் அடுத்த மாதம் துவங்க உள்ளது. இந்த நிலையில் இக்கடற்கரை சாலை சென்றடையும் கோயில் கிழக்கு ரதவீதி கடற்கரை பகுதியில் இரண்டு அடுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. பல நூறு கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படவுள்ள இப் பார்க்கிங் வளாகத்தில் சுமார் 600 வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. அக்னி தீர்த்தம் கடற்கரை சமீபம் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் பார்க்கிங் வளாகத்தில் தேநீர், சிற்றுண்டி உள்பட பலதரப்பட்ட கடை காம்ப்ளக்ஸ், லாக்கர் வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது.

கோயில் கிழக்கு கடற்கரை பகுதியில் கார் பார்க்கிங் அமையவுள்ள இடத்தை சென்னை ஐஐடி பொறியியல் நிபுணர் குழுவினர் சில நாட்களுக்கு முன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இவர்களின் அறிக்கை அரசுக்கு கிடைத்ததும் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமேஸ்வரம் நகரில் ஏற்கனவே வடக்கு சுற்றுச் சாலை திட்டத்திற்கான ஆய்வு பணிகள் முடிந்த நிலையில் நிதி ஒதுக்கப்பட்டதும் பணிகள் துவங்கும் என கூறப்படுகிறது.

இந்த இரண்டு அடுக்கு பார்க்கிங் அமையும் பட்சத்தில் கோயில் தெற்கு பகுதியில் மற்றும் நகருக்குள் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்திக்கொள்ள முடியும்.சாலையில் போக்குவரத்தும் சீராக இருக்கும். ஆனால் 600 வாகனங்கள் மட்டுமே நிறுத்த முடியும் என்பதால் எதிர்காலத்தில் வாகனங்களின் வருகைக்கேற்ப இது போதுமானதாக இருக்காது.

ஆகையால் எதிராக நலன் கருதி தற்போது பயன்பாட்டில் இருக்கும் கோயில் கார் பார்க்கிங் வளாகத்தில் இரண்டு அடுக்கு பார்க்கிங் வளாகத்தை ஏற்படுத்த தேவஸ்தான நிர்வாகம் முன்வர வேண்டும். கோயில் கார் பார்க்கிங் வளாகத்தில் பயன்பாட்டில் உள்ளது போக மீதியுள்ள ஆறு ஏக்கர் நிலத்தில் இரண்டு அடுக்கு பார்க்கிங் வசதியை ஏற்படுத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. சுற்றுலா பயணிகள், பக்தர்களின் நலன் கருதி கோயில் இடத்தில் இரண்டு அடுக்கில் ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன் மல்டிலெவல் பார்க்கிங் வசதி ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் இரண்டு அடுக்கு மல்டி கார் பார்க்கிங் வளாகம் appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,
× RELATED கடல் நீர்த்தேக்கத்தில் தடுப்புவேலி அமைத்து மீன் பிடிப்பு